தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள்– பரிசை பெறுங்கள் புதிய திட்டம் ஆணையாளர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள் பரிசை பெறுங்கள் என்னும் புதிய திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-24 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள் பரிசை பெறுங்கள் என்னும் புதிய திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக்

தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்த மாதம் 15–ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றின் கவர்களை தனியாக பிரித்து அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய திட்டம்

இதனால் பிளாஸ்டிக்கை கொடுங்கள் பரிசை பெறுங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்திய 10 பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்படும். அதில் உள்ள பரிசுத் தொகையை பொருட்கள் வாங்கும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இது தூத்துக்குடி மாநகராட்சியால் முதன் முதலாக செயலல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் ஆகும்.

இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி சுடலை காலனியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஒத்துழைப்பு

நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, பொதுமக்கள் இந்த பரிசுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வாங்கும் நபர்களுக்கு இலவசமாக சாம்பார் தூக்குவாளி வழங்கும் நிகழ்ச்சியை தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்