ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை, மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தில் வன்முறை

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாய மக்கள் நடத்திய போராட்டத்தில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்தும் வன்முறை வெடித்தது.

Update: 2018-07-23 23:04 GMT
மும்பை,

ஆற்றில் குதித்து வாலிபர் ஒருவர் தற்கொைல செய்துகொண்டார். 9-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரமாண்ட பேரணிகளை நடத்தினர். இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அரசுக்கு தங்கள் பலத்தை காட்டினர்.

இருப்பினும் தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்பது மராத்தா சமுதாயத்தினரின் குமுறலாக இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல கட்டமாக லட்சக்கணக்கில் மக்களை திரட்டி அமைதி பேரணிகளை நடத்தி வந்த மராத்தா சமுதாயத்தினர், அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாததால் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர்.

தற்போது மராத்தா சமுதாயத்தினர் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சமுதாயத்தினர் அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தி தீ வைத்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் மாநிலத்தின் பல இடங்களிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு வரும் மராத்தா சமுதாயத்தினரின் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஷாடி ஏகாதசி திருவிழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டு பண்டர்பூர் நகரில் மிக பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பண்டர்பூர் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று மராத்தா சமுதாயத்தினர் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வார்தாவில் சாலைகளின் குறுக்கே டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினார்கள். சிந்துதுர்க், பீட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளை மறித்து வாகன போக்குவரத்தை முடக்கினார்கள். பர்பானியில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீவைத்தும் கொளுத்தப்பட்டன. இதில் ஒரு அரசு பஸ் மற்றும் ஒரு போலீஸ் வாகனமும் அடங்கும். இச்சல்கரஞ்சியில் அரசு பஸ்சின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

இதேபோல தானே, புனே உள்ளிட்ட பகுதிகளில் மராத்தா சமுதாயத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவுரங்காபாத் மாவட்டம் காய்காவ் கிராமத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தில் திரண்டனர். அங்கு மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக பாலத்தின் தடுப்பு கம்பிகளில் ஏறினார்கள்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதை பார்த்து பதறினார்கள். உடனடியாக ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காகாசாகேப் ஷிண்டே (வயது 28) என்பவர் ஆற்றுக்குள் குதித்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் உடனடியாக மீட்கப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போராட்டத்தின் போது, வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அவுரங்காபாத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்