வெளிநாட்டு பெண்ணை பழிவாங்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திருமணத்துக்கு மறுத்த வெளிநாட்டு பெண்ணை பழிவாங்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-23 22:38 GMT
மும்பை,

மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சனிக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில், எதிர்முனையில் பேசிய மர்மநபர் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் ஏமன் நாட்டுக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க வரும் அந்த நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் வெடிகுண்டுடன் வருவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் விமான நிலையத்துக்கு வந்த குறிப்பிட்ட இளம்பெண்ணை பிடித்து போலீசார் அவரது உடைமைகளில் சோதனை யிட்டனர்.

ஆனால் வெடிகுண்டு ஏதும் அவரிடம் சிக்கவில்லை. இதன் மூலம் மர்ம ஆசாமி அந்த பெண் வெடிகுண்டுடன் வருவதாக பொய் கூறியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், முகமதலி ரோடு பகுதியை சேர்ந்த குதுப்தின் ஹதிம்பாய்(வயது28) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டி வந்ததாக கூறினார். எனவே அவர் தன்னை பழிவாங்குவதற்காக இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கலாம் என தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் குதுப்தின் ஹதிம்பாயை பிடித்து விசாரித்தனர்.

இதில், கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன. மேற்கண்ட இளம்பெண் ஏமன் நாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு ஆன்-லைன் திருமண தகவல் மையம் மூலம் குதுப்தின் ஹதிம்பாய் அறிமுகமாகி உள்ளார். அப்போது, தான் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என கூறினார்.

பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு வாட்ஸ்-அப் மூலம் பழகி வந்தனர். இந்தநிலையில், தனது தந்தையை சிகிச்சைக்காக மும்பை அழைத்து வந்த அந்த பெண்ணுக்கு குதுப்தின் ஹதிம்பாய் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும், அவர் ஒரு கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவருடனான தொடர்பை துண்டித்து விட்டு அப்பெண் ஏமனுக்கு புறப்பட திட்டமிட்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த குதுப்தின் ஹதிம்பாய் அவரை பழிவாங்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குதுப்தின் ஹதிம்பாயை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப் பட்டார்.

மேலும் செய்திகள்