புயலில் சிக்கி கடலில் நீந்தி வந்த இலங்கை மீனவர்: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சட்ட உதவியை நாடினார்

புயலில் சிக்கி நீந்திக் கொண்டிருந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டு ராமேசுவரம் வந்த இலங்கை மீனவர் தன்னை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சட்ட உதவியை நாடி உள்ளார்.

Update: 2018-07-23 22:15 GMT

ராமநாதபுரம்,

இலங்கையைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் மரியதாஸ் (வயது 37). இவர் அதே பகுதியை சேர்ந்த அன்றன்(20) என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி பைபர் படகில் மீன்பிடிக்க வந்துள்ளார். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென வீசிய கடும் புயலில் பைபர் படகு கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் இருந்த இருவரும் கடலில் விழுந்துள்ளனர். தண்ணீர் கேன் மற்றும் டீசல் கேன் ஆகியவற்றை பிடித்தபடி நீந்திக்கொண்டிருந்தனர். சில மணி நேரத்தில் அன்றன் கடலுக்குள் மூச்சுப்பிடிக்க முடியாமல் மூழ்கினார். மரியதாஸ் மட்டும் டீசல் கேனை பிடித்தபடி நீந்திக்கொண்டு வந்துள்ளார்.

மறுநாள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மரியதாசை மீட்டு ராமேசுவரம் கொண்டு வந்தனர். மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீனவர் என்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்து அவர் தூத்துக்குடியில் தனது அக்காள் கவுரியுடன் தங்கிக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார். 8 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கியிருக்கும் மரியதாஸ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இலங்கை மீனவர் மரியதாஸ் 8 மாத போராட்டத்திற்கு பின்னர் தற்போது சட்ட உதவியை நாடி உள்ளார். இதற்காக அவர் ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்–கோர்ட்டு நீதிபதியுமான ராமலிங்கத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி இது தொடர்பாக மரைன் போலீசாரை வரவழைத்து கருத்தினை கேட்டதோடு, முதல் தகவல் அறிக்கையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மரியதாசை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து கலெக்டரிடம் கேட்டபோது, “மரியதாஸ் இலங்கையை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்தி மரியதாசை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து உரிய முடிவு செய்யப்படும்.” என்றார்.

மேலும் செய்திகள்