கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது.

Update: 2018-07-23 22:30 GMT
மண்டியா,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுகொள்ளளவை எட்டிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவியதால், மாநிலத்தில் விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர். தற்போது நல்ல மழை பெய்து வருவதாலும், அணைகள் வேகமாக நிரம்பி வருவதாலும் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தபடி இருந்தது. அதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த 19-ந்தேதி இரு அணைகளும் தனது முழுகொள்ளளவையும் எட்டின. இதனால் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆறு மூலம் தமிழகத்திற்கு சென்று வருகிறது.

இதற்கிடையே கடந்த 20-ந்தேதி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை செய்து, நவதானியங்கள் அடங்கிய முறத்தை அணை நீரில் போட்டு வழிபாடு நடத்தினார். இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வந்தப்படி உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 123.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 48,063 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அதுபோல் அணையில் இருந்து வினாடிக்கு 51,038 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பழமையான கோவில்கள், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதேப் போல் நேற்று காலை நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283 அடியாக இருந்தது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 28,838 கனஅடி வீதமாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 31,200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டு ஓடி டி.நரசிப்புரா தலக்காடு பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து தமிழ்நாட்டிற்கு செல்கிறது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 82,238 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு சென்றது. நேற்று இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு கொஞ்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலக்காடு பகுதியில் இருகரைகளை தொட்டப்படி செல்லும் வெள்ளப்பெருக்கை காண பொதுமக்கள் குவிந்தபடி உள்ளனர். மேலும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் பெரும் இரைச்சலுடன் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதை காண அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

இரவில் அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அழகை கண்டு ரசிக்க வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், செல்போனில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகிறார்கள். இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணை பகுதிகளில் மக்கள் கூட்டம் தினமும் அலைமோதி வருகிறது.

மேலும் செய்திகள்