நெல்லையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஏழை-எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர் ஷில்பா

நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

Update: 2018-07-23 23:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். பொதுமக்கள் வரிசையில் நின்று மனு கொடுத்தனர். மாற்றுதிறனாளிகள் கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்தனர். அவர்கள் இருக்கும் இடம் சென்று கலெக்டர் மனுக்களை வாங்கினார்.

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் ராமலிங்கம். அவர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “நான் எங்கள் ஊரில் உள்ள ராமலிங்க சுவாமி கோவிலில் 40 ஆண்டுகளாக நாதஸ்வர கலைஞராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கோவிலில் இருந்து தந்த குடியிருப்பு கடந்த ஆண்டு ஒகி புயல் மழையில் பாதிக்கப்பட்டு, இடிந்து சேதம் அடைந்தது. அந்த குடியிருப்பை சரி செய்து கட்டி கொடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நெல்லை தாலுகா நாரணம்மாள்புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மரணமடைந்ததையொட்டி, அவரின் வாரிசு மஞ்சுளா கோமதிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.

தாட்கோ மூலம் சிவகிரி தாலுகாவை சார்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 10 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை 6 பேருக்கு பிரதி மாதம் ரூ.1000 பெறுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டது. அதேபோல் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 19 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு, பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தாட்கோ மாவட்ட மேலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டை தாசில்தார் திரு.கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்