லட்சுமிவர தீர்த்த சுவாமி மர்ம மரணம்: சிரூர் மடத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மாயம்

மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி மர்ம மரண விவகாரத்தில், அவர் தங்கியிருந்த சிரூர் மடத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மாயமாகி உள்ளது. இதனால் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-07-23 22:45 GMT
மங்களூரு,

உடுப்பியில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கட்டுப்பாட்டில் சோதே, சிரூர், பெஜாவர் உள்பட 8 மடங்கள் உள்ளன. இதில் சிரூர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் லட்சுமிவர தீர்த்தசுவாமி. இந்த மடத்தின் 30-வது மடாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 18-ந்தேதி நள்ளிரவில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந்தேதி அதிகாலை உயிரிழந்தார்.

மடாதிபதி லட்சுமிவர தீர்த்தசுவாமி விஷம் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தும்படியும் அவரது தம்பதி லதாவியா ஆச்சார்யா, இரியடுக்கா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் இறப்பு, மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அவருக்கு தனது பெண் உதவியாளரான ரம்யா ஷெட்டி உள்பட சிலருடன் நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும், ரம்யா ஷெட்டி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டதாகவும் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

மேலும் சில மடாதிபதிகளுடன், லட்சுமிவர தீர்த்தசுவாமிக்கு தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கணியூர், சோதே, அத்மாரு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள், லட்சுமிவர தீர்த்த சுவாமியின் தம்பி லதாவியா ஆச்சார்யா, உதவியாளர் ரம்யா ஷெட்டி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணம் தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணத்தில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் போலீசார் சிரூர் மடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று போலீசார் சிரூர் மடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் டி.வி.ஆர். கருவி மாயமாகி இருந்தது தெரியவந்தது. அதை யாரோ எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. மேலும் இந்த வழக்கில் துப்புதுலக்க முக்கிய துருப்புசீட்டாக போலீசார் கருதிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைக்காததால் அவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே மரணமடைந்த மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் உதவியாளர் ரம்யா ஷெட்டி உடுப்பி அருகே கின்னிமுல்கி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த குடியிருப்பில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மரணம் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை போலீசார் உறுதிபடுத்தவில்லை. அதுபோல் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பாலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மஞ்சு என்பவரையும் இரியடுக்கா போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி உணவில் விஷம் கலந்துகொடுத்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், சிரூர் மடத்தில் உள்ள சமையல்காரர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணம் அடைந்து 5 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அவரது சாவில் உள்ள மர்ம முடிச்சு அவிழவில்லை. இதனால் அவரது பக்தர்களும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். அதுபோல் கடந்த 5 நாட்களாக சிரூர் மடத்திற்குள் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு வேலைபார்த்து வந்த 4 வேலையாட்கள் மட்டுமே அந்த மடத்தில் தங்கியிருந்து வருகிறார்கள். இதனால் சிரூர் மடம் வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 2 நாளில் வெளியாகும் என்றும், அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்