மணலி அருகே தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி மோதி 13 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

சென்னையை அடுத்த மாதவரத்தில் இருந்து அத்திப்பட்டு புதுநகருக்கு நேற்று அதிகாலை டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

Update: 2018-07-23 22:00 GMT
திருவொற்றியூர்,

லாரியை கடலூரை சேர்ந்த முத்துக்குமரன் (வயது 28) என்பவர் ஓட்டினார்.
மாதவரம் ரிங்ரோடு மணலி புதுநகர் சந்திப்புக்கு அருகே வந்தபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த நடைமேடையின் மீது ஏறியது.

நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி அவற்றின் மீது ஏறி சென்ற லாரி அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் கட்டுப்பாட்டு அறையை ஒட்டி நின்றது.  அப்போது அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் மணலி போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் டேவிட்பொன்ராஜ் உள்பட போலீசார் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு சற்று தூரத்துக்கு முன்பே டேங்கர் லாரி நின்றுவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆனால் லாரி ஏறி, இறங்கியதில் 13 மோட்டார் சைக்கிள்களும் நசுங்கி, பலத்த சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் முத்துக்குமரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்