தேவாரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க பயிற்சி பெற்ற கும்கி யானைகள்: அதிகாரி தகவல்
தேவாரம் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க பயிற்சி பெற்ற கும்கி யானைகள் வருகிறது.
தேவாரம்,
தேவாரம் பகுதியில் உள்ள பெரும்பு வெட்டி, 18-ம் படி, தாலைஊற்று உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானை தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் என 7 பேரை அடித்துக் கொன்றது. எனவே யானையின் நடவடிக்கைகளை துல்லியமாக கண்டறிந்து மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் கடந்த 35 நாட்களாக வனப்பகுதியில் முகாமிட்டு இருந்தனர். அவர்கள் யானையின் வழித்தடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மேலும் யானை செல்லும் அனைத்து இடங்கள் குறித்தும் வரைபடத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டனர்.
இதனிடையே காட்டுயானை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வனஅலுவலர் கவுதம், உதவி வனஅலுவலர் மகேந்திரன், உத்தமபாளையம் வனஅலுவலர் ஜீவனா ஆகியோரை அழைத்து யானையை பிடிக்க அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்தார். இதையடுத்து மாவட்ட வனஅலுவலர் கவுதம், சென்னைக்கு நேரில் சென்று காட்டுயானை செய்யும் அட்டகாசம், பயிர்களை நாசம் செய்யும் விதம், மனித உயிர்களை கொன்றது உள்ளிட்ட விவரங்கள், தினந்தோறும் தேவாரம் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள் ஆகியவை குறித்து உயர்அதிகாரிகளிடம் விளக்கினார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
யானையை பிடிக்க இன்னும் சில நாட்களில் அனுமதி கிடைக்கும். யானைகுறித்து முழுவிவரங்களும் சேகரிக்கப்பட்டு விட்டன. எந்த இடத்தில் யானை போய் நின்றாலும் அதை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகிறோம். இதற்காக பயிற்சிபெற்ற 2 கும்கி யானைகள் பொள்ளாச்சி டாப் சிலிப் என்ற இடத்தில் இருந்து வருகிறது. 60 வன ஊழியர்கள், 5 கால்நடை டாக்டர்கள், 3 பொக்லைன்எந்திரம், 2 பெரிய லாரிகள் வர உள்ளன. மயக்க ஊசி போட்டு யானையை பிடிப்பதற்கான திட்டமும் வனத்துறையிடம் உள்ளது. யானையை பிடிக்க கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.