திசையன்விளையில் பிளஸ்–1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை மோட்டார் சைக்கிள் பழுதை சரிசெய்ய தாயார் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீதம்

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் பழுதை சரிசெய்ய தாயார் பணம் கொடுக்க மறுத்ததால் பிளஸ்–1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-22 22:45 GMT

திசையன்விளை, 

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் பழுதை சரிசெய்ய தாயார் பணம் கொடுக்க மறுத்ததால் பிளஸ்–1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்–1 மாணவர்

நெல்லை நெல்லையப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலன். கச்சேரி பாடகர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுடைய மகன் லட்சுமிகாந்தன் (வயது 18).

பாலன் தனது குடும்பத்தினருடன் திசையன்விளை மணலிவிளை முத்தாரம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். லட்சுமிகாந்தன் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–1 படித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் லட்சுமிகாந்தன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் சுப்புலட்சுமி கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் உள்ளே இருந்து பதில் எதுவும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சுப்புலட்சுமி மற்றும் அவருடைய உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு லட்சுமிகாந்தன் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்து சுப்புலட்சுமி கதறி அழுதார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். லட்சுமி காந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லட்சுமிகாந்தனின் மோட்டார் சைக்கிள் பழுதடைந்ததால் அதை சரிசெய்ய தனது தாயார் சுப்புலட்சுமியிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு உள்ளார். அப்போது சுப்புலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த லட்சுமிகாந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. லட்சுமிகாந்தனின் இந்த விபரீத முடிவு, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்