மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 கட்டிட தொழிலாளர்கள் சாவு கோவில்பட்டி அருகே பரிதாபம்

கோவில்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 2பேர் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2018-07-22 22:25 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 2பேர் பரிதாபமாக பலியாகினர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கோவில்பட்டி சண்முகாநகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் ஆதிராம்(வயது20). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கட்டிட பணியை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே ஊத்துப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் ஜனார்த்தனபாண்டி(19) மற்றொரு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து ஊத்துப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். கோவில்பட்டி அருகில் உள்ள கெச்சிலாபுரம் விலக்கு பகுதியில் வந்த போது இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்கு உள்ளாகின.

2 பேர் படுகாயம்

இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2பேரும் சாலையில் விழுந்து பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அந்த பகுதியில் காயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், 2 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி ஆதிராம் இறந்து போனார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜனார்த்தன பாண்டி நேற்று இரவில் பரிதாபமாக இறந்தார். இருவருடைய உடல்களை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 கட்டிட தொழிலாளர்கள் பலியான சம்பவம் கோவில்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்