கதிராமங்கலம் வனதுர்க்கை கோவிலில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

கதிராமங்கலம் வனதுர்க்கை கோவிலில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-07-22 22:15 GMT

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே உள்ள ஆற்காடு குடியான தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி குணவதி (வயது47). இவர் நேற்று மாலை தனது மகள் மற்றும் உறவினர்களுடன் கதிராமங்கலத்தில் உள்ள வனதுர்க்கை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி தரிசனம் முடித்துவிட்டு குணவதி, கோவில் பிரகாரத்துக்கு வந்தபோது அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை அடையாளம் காண, கண்காணிப்பு கேமராவை பார்த்து உதவி செய்யும்படி குணவதி, கோவில் நிர்வாகிகளிடம் கேட்டார்.

அப்போது கோவிலில் கண்காணிப்பு கேமராவுக்கான டி.வி. பழுதாகி இருப்பதால் கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க முடியாது என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் குணவதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்