விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் நகை, பணம் கொள்ளை
விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று காலை வழக்கம் போல் பக்தர்கள் வந்தனர். அப்போது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதேபோல அந்த கோவிலின் அருகே உள்ள பெருமாள் கோவிலிலும், மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.
மேலும் கம்மாபுரம் அருகே சு.கீணனூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
கோவிலில் உள்ள அம்மனின் கண்ணை கட்டி, மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கிராம மக்களிடையே தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் கோவிலை சுற்றிலும் மஞ்சள் தெளித்து, விளக்கேற்றி சிறப்பு வழபாடு நடத்தினர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.