மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

வடகாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-07-22 23:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 20). தஞ்சாவூர் மாவட்டம், துளுக்கவிடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பாலமுருகன் (22). வெளிநாட்டில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு திரும்பி உள்ளார். 2 பேரும் நண்பர்கள். இந்தநிலையில் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வடகாடு கிராமத்தில் நடந்த ஒரு மொய் விருந்து விழாவிற்கு சென்றனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வடகாடு அருகே மாங்காடு பூச்சிகடை என்ற இடத்தில் நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவர் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரின் மீதும் கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அணவயல், துளுக்கவிடுதி, மாங்காடு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் விபத்து பகுதி என்று பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பு அரண் இல்லை. மேலும் இதே பகுதியில் பல விபத்துகள் நடந்து பலர் பலியாகி உள்ளனர். தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிப்பு, வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உடல்களை கொடுக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து வடகாடு போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலைமறியலால் நேற்று மதியம் 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொய் விருந்துக்கு சென்று திரும்பி வாலிபர்கள் கார் மோதி இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்