செல்போனுக்கு ‘சார்ஜ்’ செய்யும் வசதியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு புதிய விரைவு பஸ்கள் விடப்பட்டன

செல்போனுக்கு ‘சார்ஜ்’ செய்யும் வசதியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 புதிய விரைவு பஸ்கள் விடப்பட்டு உள்ளன. விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-07-22 23:00 GMT
திருச்சி,

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 வழித்தடங்களில் புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் (எஸ்.இ.டி.சி) திருச்சி மண்டலத்துக்கு 2 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த பஸ்களை நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விழாவுக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இந்த புதிய பஸ்களில் இருக்கைக்கு மேல் பொருட்கள் வைக்கும் பகுதியில் செல்போன்களை ‘சார்ஜ்’ செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், முதல் 4 இருக்கைகளில் அமரும் பயணிகளின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு ‘சீட் பெல்ட்’ போட்டுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் திடீர் என பிரேக் போடப்படும் நேரத்தில் பயணிகள் முன்னால் உருண்டு விழாமல் இருக்க முடியும் என்றும், விரைவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய விரைவு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கோட்ட மேலாளர் கேசவராஜ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்