திருப்பூரில் செப்டம்பர் மாதம் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பார் - சுதீஷ் பேட்டி
திருப்பூரில் செப்டம்பர் மாதம் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று மாநில துணைச்செயலாளர் சுதீஷ் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூரில் தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் சுதீஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தே.மு.தி.க.வின் 14–வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் 16–ந் தேதி திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் விஜயகாந்த் கலந்துகொள்கிறார். அவர் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றுவார். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு குறித்தும், மற்ற கட்சிகளின் வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வருகிற தேர்தல்களில் கூட்டணி குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வார். பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு உள்ளது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கமாட்டார்.
சென்னையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களிடம் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்க ஆலோசனை நடத்திக்கொண்டு தான் இருப்பார். அவர் கட்சி தொடங்கவே மாட்டார். மு.க.ஸ்டாலின் செயலற்ற தலைவராக இருக்கிறார். தே.மு.தி.க.வை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.