தாம்பரம்–செங்கோட்டை அந்தியோதையா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுமா? ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரெயில்வே கால அட்டவணையில் இடம்பெற்ற தாம்பரம்–செங்கோட்டை அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Update: 2018-07-22 22:30 GMT

விருதுநகர்,

ரெயில்வே அமைச்சகம் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்பட்டாலும், ரெயில்வே அதிகாரிகள் அந்த ரெயிலை இயக்குவதில் போதிய அக்கறை காட்டாத நிலையே நீடிக்கிறது. கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட கால அட்டவணையில் தாம்பரம்–செங்கோட்டை அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதற்கான விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு 16190 என்ற எண்ணுள்ள எக்ஸ்பிரஸ் ரெயிலும், மாற்றுப்பாதையில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு 16191 என்ற எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படும் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த ரெயில் தாம்பரம்–செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பின்னர் அந்த ரெயிலை இயக்குவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

ரெயில்வே இணை மந்திரி ராஜூகோகன் சமீபத்தில் தமிழகம் வந்திருந்த போதும், செங்கோட்டை புனலூர் அகல ரெயில்பாதையை மக்களுக்கு அர்ப்பணித்தார். அப்போது பாலக்காடு–புனலூர் வரையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்படும் என அறிவித்தார். ஆனால் தாம்பரம்–செங்கோட்டை இடையேயான அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயில் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தென்னக ரெயில்வே நிர்வாகமும் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குவதில் போதிய அக்கறைகாட்டாத நிலையே நீடிக்கிறது. நெல்லை–தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதைய எக்ஸ்பிரஸ் ரெயில், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட அதிக பயண நேரம் எடுத்துக்கொள்வதுடன் முக்கிய ரெயில்நிலையங்களில் நிற்காமல் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை–நெல்லை இடையே விருதுநகரை தவிர வேறு எந்த ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நிற்பது இல்லை. விருதுநகரில் இருந்து நெல்லை செல்வதற்கு இந்த ரெயில் 2½ மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. மேலும் இந்த ரெயில் புறப்படும் நேரமும் பொதுமக்களுக்கு வசதியாக இல்லாததால் இந்த ரெயிலில் கூட்டம் குறைவாகவே உள்ளது. மொத்தத்தில் போதிய வருவாய் இல்லை என கூறி அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயிலை ரத்து செய்யும் எண்ணத்தில் தான் ரெயில்வே அதிகாரிகள் உள்ளார்களே என்று எண்ணத்தோன்றுகிறது.

கொல்லத்தில் இருந்து அகல ரெயில்பாதை பயன்பாட்டிற்கு வந்த பின்னர் தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மீட்டர்கேஜ் ரெயில்பாதையாக இருக்கும் போது இயக்கப்பட்டு வந்த கொல்லம்–நாகூர், கொல்லம்–கோவை, கொல்லம்–ராமேசுவரம் ஆகிய ரெயில்கள் இயக்கப்படவில்லை. எற்கனவே ரெயில்வே கால அட்டவணையில் இடம்பெற்ற செங்கோட்டை–தாம்பரம் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இன்னும் இயக்கப்படாத நிலையில் உள்ளதால், ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயிலை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்