கேரளாவை சேர்ந்த தொழில் அதிபரை உதவியாளருடன் காரில் கடத்திய கும்பல், பஸ்பயணிகள் விரட்டி பிடித்தனர்
மேலூர் அருகே ரப்பர் தொழிற்சாலை நடத்தும் கேரள தொழில் அதிபரையும், அவரின் உதவியாளரையும் மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. தொழில் அதிபரை மீட்ட போலீசார், பிடிபட்ட கடத்த கும்பலை சேர்ந்தவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி கிராமம். இங்கு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஜோஸ்மேட்டிவ் என்பவர் ரப்பர் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தங்கி உள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தனது உதவியாளர் மத்தாயி என்பவருடன் தொழிற்சாலைக்கு காரில் சென்றார். அந்த காரை ஷியாம் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது தொழில் அதிபரின் காரை, ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் 2 கார்களில் பின்தொடர்ந்து வந்தது.
மேலூர் நான்குவழிச்சாலையில் உள்ள நரசிங்கம்பட்டி என்ற இடத்தில் மலைப்பகுதியில் சென்ற போது, தொழில் அதிபரின் காரின் பின்பகுதியில் மர்ம கும்பல் காரை மோத செய்தனர். அதில் டிரைவர் ஷியாம் காரை விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது தங்களது கார்களை நிறுத்திய மர்ம கும்பல், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து ஷியாமை சரமாரியாக தாக்கினர். அதில் அவர் மயங்கி விழுந்ததும், துப்பாக்கியை காட்டி தொழில் அதிபரை மிரட்டி கைகளை கட்டி, அதே காரில் கடத்தி சென்றனர்.
இந்த சம்பவத்தை அந்த வழியாக வந்த டவுன் பஸ் பயணிகள் பார்த்து கீழே இறங்கி மர்ம கும்பலை துரத்தினர். உடனே மர்ம கும்பல் தாங்கள் வந்த 2 கார்களுடன், தொழில் அதிபரை கடத்திய காரையும் மதுரை ரோட்டில் வேகமாக ஓட்டி சென்றனர். தொடர்ந்து பயணிகள் அனைவரும் கடத்தல் கும்பல் கார்கள் மீது சரமாரியாக கற்களை வீசியதும், கும்பலை சேர்ந்தவர்கள் தொழில் அதிபருடன் 2 கார்களில் தப்பி சென்றனர். மர்ம கும்பலின் ஒரு கார் மட்டும் மண்ணில் சிக்கிக்கொண்டது. அதை ஓட்டி வந்த டிரைவர் மட்டும் பயணிகளிடம் சிக்கினார்.
தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் பிடிபட்ட கடத்தல் கும்பலை சேர்ந்தவரையும், காரையும் போலீஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கார் டிரைவர் ஷியாமை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 22) என்றும், கடத்தல் கும்பல் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும், பணம் கேட்டு தொழில் அதிபர் ஜோஸ்மேட்டிவ் கடத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து போலீஸ் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடத்தல் கும்பல் சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியில் தொழில் அதிபர் ஜோஸ்மேட்டிவையும், அவரது சொகுசு காரையும் விட்டு விட்டு, உதவியாளர் மத்தாயியை மட்டும் கடத்தி சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் கருப்பாயூரணி போலீஸ் நிலையத்திற்கு தொழில் அதிபரை அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.