வால்பாறை–பொள்ளாச்சி சாலையில் விபத்தை தடுக்க வைக்கும் கண்ணாடிகள் சேதம், நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை

வால்பாறை–பொள்ளாச்சி சாலையில் விபத்தை தடுக்க வைக்கும் கண்ணாடிகளை சேதப்படுத்தும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-22 22:00 GMT

வால்பாறை,

வால்பாறை–பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதனால் உயிர் சேதங்களும், பலத்த காயங்களும் ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வால்பாறை–பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் 1–வது கொண்டை ஊசி வளைவு முதல் 40–வது கொண்டை ஊசி வளைவு வரை 40 இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் எதிரே வரும் வாகனங்களை எளிதில் தெரிந்து கொண்டு விபத்து ஏற்படாமல் ஓட்டுவதற்கு வசதியாக கான்வெக்ஸ் கண்ணாடிகளை வைத்தனர்.

இதில் 9–வது மற்றும் 11–வது கொண்டை ஊசி வளைவ பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை சுற்றுலா பயணிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதே போல இரவு நேரங்களில் வால்பாறை மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் பனி மூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் எளிதாக சாலைகளை பார்த்து வாகனங்களை செலுத்துவதற்கு வசதியாக சாலையின் நடுவே ஒளிரும் ஸ்டட்டுகள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் விபத்துகள் ஏற்படும் இடங்களிலும் சாலையின் ஓரப்பகுதிகள் எளிதாக தெரிவதற்கு வசதியாகவும் கிட்டத்தட்ட 1 லட்சம் மதிப்பில் சோலார் ஸ்டட்டுகள், கவர்க்கல் எஸ்டேட், புளியங்கண்டி, அய்யர்பாடி எஸ்டேட் உட்பட பல்வேறு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளதை சுற்றுலாபயணிகள் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

எனவே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள், அறிவிப்பு பலகைகள், சோலார் ஸ்டட்டுகளை சேதப்படுத்தும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சாலைகளில் சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பொருட்களை சேதப்படுத்துவதை வாகன ஓட்டிகள் பார்த்தால் அட்டகட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலோ அல்லது வனத்துறையின் சொதனை சாவடிகளிலோ தெரியப்படுத்த வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்