இந்து முறைப்படி திருமணம் நடந்தது கனடா நாட்டு இளம்பெண்ணை கரம்பிடித்த மைசூரு வாலிபர்

கனடா நாட்டு இளம்பெண்ணை மைசூரு வாலிபர் காதலித்து கரம்பிடித்தார். அவர்களது திருமணம் நேற்று மடிகேரியில் இந்து முறைப்படி நடந்தது.

Update: 2018-07-22 23:00 GMT
சிக்கமகளூரு,

கனடா நாட்டு இளம்பெண்ணை மைசூரு வாலிபர் காதலித்து கரம்பிடித்தார். அவர்களது திருமணம் நேற்று மடிகேரியில் இந்து முறைப்படி நடந்தது.

காதல்

மைசூரு குவெம்பு நகரை சேர்ந்தவர் விட்டல். இவரது மனைவி வேதா. இந்த தம்பதியின் மூத்த மகன் சரத் விட்டல்(வயது 32). இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சரத் விட்டல், ஓட்டல் தொழில் சம்பந்தமான படிப்பை படிக்க கனடா நாட்டுக்கு சென்றார். படிப்பு முடிந்ததும் கனடா நாட்டிலேயே அவர் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

சரத் விட்டலின் ஓட்டலின் அருகே, ஒரு யோகா மையம் செயல்பட்டு வருகிறது. அந்த யோகா மையத்தில் கனடாவை சேர்ந்த கார்லி ஒல்வியா என்ற இளம்பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சரத் விட்டலுக்கும், கார்லி ஒல்வியாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்து முறைப்படி திருமணம்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சரத் விட்டலும், கார்லி ஒல்வியாவும் தங்களின் காதல் குறித்து பெற்றோரிடம் கூறினார்கள். அவர்களின் காதலுக்கு பெற்றோரும் பச்சை கொடி காட்டினார்கள்.

இந்த நிலையில் நேற்று குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் சரத் விட்டல், கார்லி ஒல்வியாவின் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் சரத் விட்டல், கார்லி ஒல்வியாவுக்கு தாலி கட்டினார். இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட சரத் விட்டல், கார்லி ஒல்வியாவின் நண்பர்கள், உறவினர்கள் புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்