தியாகராயநகரில் நகைக்கடையில் 1 கிலோ தங்க ஆபரணங்கள் திருட்டு கடையில் பணியாற்றிய சகோதரர்கள் கைது

சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் 1¼ கிலோ தங்க ஆபரணங்கள் திருடியதாக அதே கடையில் பணியாற்றிய சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-21 22:17 GMT
சென்னை,

சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷர்னிக் நாகர்(வயது 46). இவர் சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் மாதந்தோறும் நகை விற்பனை மற்றும் இருப்பு விவரம் குறித்த கணக்குகளை சரிபார்ப்பது வழக்கம்.

அதன்படி ஜூன் மாதத்துக்கான விவரங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷர்னிக் நாகர் ஆய்வு செய்தார். அப்போது விற்பனை பிரிவில் இருந்த செயின், கம்மல், வளையல் என 1 கிலோ 299 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

2 பேர் கைது

கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது விற்பனை பிரிவில் பணியாற்றிய சவுகார்பேட்டை சந்திப்பா முதலி தெருவை சேர்ந்த சகோதரர்கள் நிர்மல் கதோடு(27), நித்திஷ் கதோடு(25) ஆகியோர் நகைகளை ‘அபேஸ்’ செய்யும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஷர்னிக் நாகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மல் கதோடு, நித்திஷ் கதோடு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். திருட்டுப் போன நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். 

மேலும் செய்திகள்