காலணிகள் செய்முறை பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
காலணிகள் செய்முறை பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
காலணிகள் செய்முறை பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
காலணி செய்முறை பயிற்சிமத்திய அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் தோல் மற்றும் காலணிகள் செய்முறை பயிற்சி நிறுவனம் மூலம் பல்வேறு வகையான காலணிகள் செய்முறை பயிற்சிகள் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக நடத்தப்பட உள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர்களும், இதர வகுப்பினரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
17 முதல் 35 வயதுக்குள் உள்ள 10–ம் வகுப்பு, பிளஸ்–2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் முழுநேர பயிற்சிக்கும், 8, 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பகுதிநேர பயிற்சிக்கும் தகுதியானவர்கள்.
பதிவுஇந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வருகிற 30–ந்தேதி கடைசி நாள் ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு, உறைவிடம், பயிற்சி கட்டணம் இலவசம். இதர வகுப்பினரும் இந்த பயிற்சி முகாமில் கட்டணத்துடன் கலந்து கொள்ளலாம். அடிப்படை கல்வி தகுதி 8–ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் தங்கள் சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வரும்போது, கல்வித்தகுதி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை 0461–2340607 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.