இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,100 கிலோ கடல்அட்டைகளுடன் 2 பேர் கைது
இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,100 கிலோ கடல் அட்டைகளுடன் 2 பேரை கடலோர போலீசார் பிடித்து கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் காவலர்கள் யாசின், சரவணன், குமார் உள்ளிட்ட போலீசார் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் போல் ஒரு நாட்டுப் படகில் கடலோர போலீசார் மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதியில் இருந்து தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர்.
அப்போது மண்டபம் அருகே நடுக் கடலில் உள்ள முயல் தீவு அருகே கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு மீன் பிடி நாட்டுப் படகை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த படகில் 26 மூடைகளில் பதப்படுத்தப்பட்ட 1,100 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட அந்த கடல் அட்டைகளையும்,கடத்தலுக்கு பயன் படுத்தப் பட்ட படகையும் பறிமுதல் செய்த கடலோர போலீசார் படகில் இருந்த தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மாயாண்டி (வயது39),வேதாளையை சேர்ந்த காசிம் (37) 2 பேரையும் பிடித்து மண்டபம் கடலோர காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குபதிந்து கைது செய்துவிசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் வேதாளையில் இருந்து படகில் கடல் அட்டைகளை ஏற்றியதாகவும் இலங்கை கடல் பகுதிக்கு சென்ற பின்பு இலங்கையை சேர்ந்த ஏஜெண்டுகள் படகில் வந்து கடல் அட்டைக்கான ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை கேட்பார்கள். அந்த எண்ணை சொல்லியவுடன் அதற்குரிய பணத்தை கொடுத்து விட்டு கடல் அட்டைகளை பெற்றுச்சென்று விடுவார்கள் எனவும் பல முறை இதுபோன்ற கடல் அட்டைகள் கடத்தி சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்றம் கூறப்படுகின்றது. ஒரேநாளில் 1,100 கிலோ கடல்அட்டைகள் பிடிபட்டுள்ள சம்பவம் வனத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.