வானூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது: போலீஸ் ரோந்து பணியில் சிக்கினர்

வானூர் அருகே பொதுமக்களிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-20 23:15 GMT
வானூர், 

வானூர் அருகே திருவக்கரை - எறையூர் சாலை வழியாக செல்லும் பொதுமக்களிடம் ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் போலீசார் திருவக்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இருந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் அந்த வழியாக சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்த வந்து விசாரித்தனர்.

விசாரணையில், எறையூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயராமன் (வயது 23), பூபாலன் மகன் முருகன் (18), சக்திவேல் மகன் ஜெயக்குமார் (21), அய்யனார் மகன் அஜித்குமார் (18) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்தியது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 செல்போன்கள், 4 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்