களை கட்டத்தொடங்கியது ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
ஆடி தள்ளுபடி விற்பனை களை கட்டத்தொடங்கி விட்டது. தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை,
ஆடி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அம்மன் கோவில் திருவிழாக்கள் தான். இதற்கு அடுத்தபடியாக இருப்பது தள்ளுபடி விற்பனை.
சென்னையில் அங்காடி தெரு என்று அழைக்கப்படும் தியாகராயநகர் மற்றும் புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு சேலை வாங்கினால் 2 சேலைகள் இலவசம், ஒரு சட்டை வாங்கினால் 2 சட்டை இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
அலைமோதுகிறது
இதையடுத்து தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் பிரதான கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளிகள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட் களும் ஆடித்தள்ளுபடி பட்டியலில் இணைந்துவிட்டன.
நகைக்கடைகளும் ஒரு பவுன் தங்கத்துக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை தள்ளுபடி அறிவித்துள்ளன. இதேபோல மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலைகளுக்கு ஏற்ப தள்ளுபடி மற்றும் ஆயுட்கால காப்பீடு இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. வியாபாரிகளின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஆடி மாதம், தள்ளுபடி விற்பனை மாதமாக ஆகி களை கட்டத்தொடங்கி விட்டது.
***
*************
அமைச்சர் முன்னிலையில்
முன்னாள் பெண் எம்.எல்.ஏ.- மாவட்ட செயலாளர் வாக்குவாதம்
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு
வண்டலூர், ஜூலை.21-
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் முன்னாள் பெண் எம்.எல்.ஏ.- மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. கணிதாசம்பத், அவரது கணவர் காட்டாங்கொளத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் தற்போது காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ள ஆறுமுகம் சரியான முறையில் எங்களுக்கு கட்சி தொடர்பான தகவல்களை கூறுவதில்லை என்று குற்றச்சாட்டுகளை கூறி அமைச்சர் பென்ஜமின் முன்னிலையில் மாவட்ட செயலாளருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம் எழுந்து முன்னாள் எம்.எல்.ஏ கணிதாசம்பத் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார். மேலும் என் மீது குறைகள் இருந்தால் தலைமை அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
அ.தி.மு.க.வில் இணைந்தனர்
அப்போதும் முன்னாள் எம்.எல்.ஏ, மீண்டும் மாவட்ட செயலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் நீங்கள் இருவரும் பேசி கொண்டால் எதற்கு இந்த ஆலோசனை கூட்டம் என்று கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அமைச்சர் பென்ஜமின் கூட்டத்தில் பேசும் போது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சில முரண்பாடுகள் இருந்தால் அதனை கட்சி நிர்வாகிகள் அரவணைத்து கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக ஊரப்பாக்கம் ஜெயலலிதா பேரவை செயலாளர் கபில் என்கிற கமலக்கண்ணன் தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 200 பேர் அமைச்சர் பென்ஜமின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அனைவருக்கும் அமைச்சர் வாழ்த்துகளை கூறி வரவேற்றார். அப்போது அமைச்சருடன் மாநில அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலகுமார், மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, நகர செயலாளர் டி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.