போலீசார் வாகன சோதனை: 3 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; வாலிபர் கைது
புதுவையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கடலூரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து ஆவணங்கள் கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்கள் எதுவும் அந்த வாலிபரிடம் இல்லை. அதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் பெரிய கத்தி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை போலீசார் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், கடலூர் பழைய வண்டிபாளையம் 2–வது குறுக்குத்தெரு கண்ணகி நகரை சேர்ந்த ஆனந்த் (வயது28) என்பது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கத்தியையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆனந்த் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
புதுவை திலாசுபேட்டையை சேர்ந்த ரவுடியான ராம் என்கிற ராம்குமார், கடலூரை சேர்ந்த ரவுடி இளையராஜா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ராம்குமார் தன்னிடம் 3 திருட்டு மோட்டார் சைக்கிள் உள்ளது. அதனை என்னிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்கும் படி கூறினார். நான் எதற்காக என கேட்டபோது ஏதாவது குற்ற செயல்களுக்கு அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். அதைத்தொடர்ந்து ராம்குமார் தன்னிடம் விலை உயர்ந்த 3 மோட்டார் சைக்கிளை வழங்கினார். அதனை நான் எனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தேன். இந்தநிலையில் அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தபோது போலீஸ் வாகன சோதனையில் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனந்த் அளித்த வாக்குமூலத்தின் படி அவருடைய வீட்டில் இருந்து மேலும் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான ராம்குமார், இளையராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.