வேலை நிறுத்தம் தொடங்கியது: கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை

வேலைநிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் பஸ், ரெயில் மூலம் சரக்குகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-20 23:15 GMT

கோவை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, லாரிகளுக்கான இன்சூரன்சு கட்டணம் அதிகரிப்பு உள்பட பல்வேறு பிரச்சிகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினார்கள். இதனால் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் நேற்று முதல் ஓடவில்லை.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் இருந்து இந்தியா முழுவதும் அனுப்பப்படும் என்ஜினீயரிங் பொருட்கள், மோட்டார் பம்புகள், ஜவுளி பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் அனுப்பப்பட வில்லை. மளிகை பொருட்கள். காய்கறிகள் போன்றவை வராததால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

வேலை நிறுத்தம் காரணமாக 90 சதவீத லாரிகள் ஓடவில்லை. வேலைநிறுத்தத்தின் முதல் நாள் என்பதால் வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரிகள் சரக்குகளை இறக்க முடியாமல் இருந்தால் அதுபோன்ற லாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வேலைநிறுத்தத்திற்கு மணல் லாரி உள்பட அனைத்து லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தத் தினால் கோவை மாவட்டத்தில் தினமும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது தவிர மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.25 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு வடமாநிலங்களில் இருந்து வெங்காயம், கேரட், கோஸ் உள்பட பெரும்பாலான காய்கறிகள் லாரிகளில் தான் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக அந்த லாரிகள் வரவில்லை. வேலை நிறுத்தம் தொடங்கி 2 நாட்கள் வரை காய்கறிகள் விலை உயராது.

கேரளாவிற்கு அனுப்பப்படும் காய்கறிகள் மாலையில் சிறிய வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படு கிறது. பின்னர் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து இருக்காது என்பதால் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.கே.பொன்னுசாமி கூறியதாவது:–

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் தினசரி காய்கறிகள், பேப்பர் லோடு, மரப்பலகைகள் போன்றவை டெல்லி, குஜராத், மும்பைக்கு செல்கின்றன. இதே போல் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து தினசரி காய்கறிகள், குஜராத்தில் இருந்து பருத்தி, நாக்பூரில் இருந்து ஆரஞ்சு, டெல்லியில் இருந்து ஆப்பிள், கோலாரில் இருந்து உருளைக்கிழங்கு, கர்நாடகத்தில் இருந்து முட்டைகோஸ், மைசூரில் இருந்து சோளம், பெங்களூருவில் இருந்து பேப்பர் ஆகியவை தினசரி லாரிகளில் வந்து கொண்டிருக்கின்றன. வேலை நிறுத்தம் காரணமாக அவை அனைத்தும் தடைபடும். இதன் காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் சுமார் ரூ10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்க செயற் குழு கூட்டம் ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் பி.சுப்பரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுசெயலாளர் பி.ஏ.காளிமுத்து, மாவட்ட பொருளாளர் சம்பத், கவுரவ தலைவர்கள் எஸ்.ஆர்.பழனிசாமி, சி.ஆர்.நாராயணசாமி எம்.சுந்தரம், சி.ஆர்.கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, 3–ம் நபருக்கு அதிக தொகை செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்துவதும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அதிக தொகை வசூலிக்கப்படுவதும் லாரி டிரான்ஸ் போர்ட் தொழிலை பெருமளவில் பாதித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பஸ்களில் சிறிய அளவிலான சரக்குகளை ஏற்றிச் செல்ல மாவட்ட கலெக்டர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பயணிகள் பஸ்களில் ஒன்றிரண்டு மூட்டைகளில் சரக்குகளை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவில் சரக்குகளை அனுப்ப விரும்புபவர்கள் எங்களை அணுகினால் பஸ்களில் உள்ள இருக்கைகளை அப்புறப்படுத்தி விட்டு அதில் சரக்குகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஒரு பஸ்சில் 5 டன் அளவுக்கு சரக்குகளை அனுப்பலாம்’ என்றார்.

கோவை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவையில் இருந்து நிலைமைக்கு தகுந்தபடி ரெயில் மூலம் கூடுதல் சரக்குகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு ரெயிலிலும் சிறிய அளவிலான சரக்கு வேகன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. சரக்குகள் அதிக அளவில் வந்தால் ஒவ்வொரு ரெயிலிலும் ஒரு சரக்கு வேகன் இணைக்கப்பட்டு அதில் 23 டன் சரக்குகள் அனுப்ப முடியும். வருகிற 26–ந் தேதி கோவையில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவிற்கு தனி சரக்கு ரெயில் அனுப்பப்பட உள்ளது. அதில் 20 வேகன்கள் இணைக்கப்பட்டு கோவை, திருப்பூர். ஈரோடு வழியாக ஹவுராவிற்கு அந்த சரக்கு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்