‘பார்மாலின்’ வேதிப்பொருள் கலந்து மீன்கள் விற்கப்படுகிறதா? அதிகாரிகள் சோதனை

நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக மீன்களில் ‘பார்மாலின்’என்ற வேதிப்பொருள் கலந்து விற்கப்படுகிறதா? என்று கோவை மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Update: 2018-07-20 22:45 GMT

கோவை,

கடல் மற்றும் ஆறுகளில் பிடிக்கப்படும் மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக அதில் ‘பார்மாலின்’ என்ற வேதிப்பொருள் கேரளாவில் கலந்து விற்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் கோவையில் உள்ள மீன் மார்க்கெட்டில் ‘பார்மாலின்’ வேதிப்பொருள் கலந்து விற்கப்படுகிறதா? என்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை, மாவட்ட மீன் வளர்ச்சி துறை ஆய்வாளர் பத்மஜா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் உக்கடம் மீன் மார்க்கெட்டில் உள்ள 45 கடைகளில் நேற்றுக்காலை சோதனை நடத்தினார்கள்.

ஆனால் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மீன்களில் ‘பார்மாலின்’ என்ற வேதிப்பொருள் ஏதும் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் ‘பார்மாலின்’ கலந்த மீனை கண்டுபிடிப்பது எப்படி? என்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:–

கோவை உக்கடத்தில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், சில்லரை மீன் மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு மீன்களில் ‘பார்மாலின்’வேதிப்பொருள் கலக்கப்படவில்லை. ‘பார்மாலின்’ என்ற திரவ வேதிப்பொருள் உடல் உறுப்புகளை பல ஆண்டுகள் கெடாமல் பதப்படுத்தி வைப்பதற்கும், இறந்தவர்களின் உடல்கள் சில நாட்கள் கெடாமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இது கண், தொண்டையில் எரிச்சலை கொடுக்கும், இந்த திரவம் கலந்த பொருளை உட்கொண்டால் வயிற்று வலி ஏற்படும். மீன் மீது இந்த திரவத்தை தெளித்து (ஸ்பிரே) விடுவார்கள். மீன் உடலின் உள்ளே இந்த திரவத்தை செலுத்த முடியாது. இதனால் மீன் சில நாட்கள் கெடாமல் இருக்கும். ஆனால் ‘பார்மாலின்’ கலந்த மீனை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். புற்றுநோய் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பார்மாலின் கலந்த மீன் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீன் வாங்கும்போது அதை நுகர்ந்து பார்க்கலாம். அப்போது மீன் மீது ‘பார்மாலின்’ தெளிக்கப்பட்டு இருந்தால் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தி தண்ணீரை வரவழைக்கும். அந்த அளவுக்கு அது வீரியமிக்கது. எனவே ‘பார்மாலின்’ கலந்த மீன்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் மீன்கள் வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்