அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

கட்டிட வசதி இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-20 23:15 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் 1980-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்தப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த பள்ளியில் 494 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் மாணவ-மாணவிகள் படிக்க போதுமான கட்டிட வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.

மேலும் அந்த பள்ளியை சுற்றி ஒருபுறம் குடிநீர் ஊரணியும், மறுபுறம் குளமும் உள்ளது. மற்றொரு புறம் சுடுகாட்டில் பிணம் எரியும்போது வெளியாகும் புகையால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அந்த பகுதிகளில் செல்லும் ஆடு, மாடுகள் மாணவர்களை பயமுறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.

இந்தநிலையில் சிறிது மழைபெய்தால் கூட வகுப்புகளை நடத்தமுடியாமல் விடுமுறை அளிக்க வேண்டிய நிலையுள்ளது. மேலும் பலத்த காற்று வீசும்போது மரக்கிளைகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மண் தரையில் அமர்ந்து படிப்பதால் ஆரோக்கியம் சீர்கெட்டு வருகிறது.

எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அதுவரை பழைய இடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளியை அதே இடத்தில் இயக்கி வகுப்புகளை நடத்த வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கையை நடைமுறை படுத்தவில்லையெனில் பெற்றோர்கள் ஒன்றிணைந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்