வாழை பயிர்களை பாதுகாக்க ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை பயிர்களை பாதுகாக்க ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2018-07-20 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை பயிர்களை பாதுகாக்க ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்கள் பிரசாந்த், விஜயா, கோவிந்தராஜூ, உதவிகலெக்டர்(பயிற்சி) அனு, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முத்துஎழில் பேசினார்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது கூறியதாவது:-

கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்

தாமிரபரணி ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையால் தண்ணீர் கிடைத்து உள்ளது. இதனை அனைத்து கால்வாய்களிலும் திறந்து, கடைசிகுளம் வரை தண்ணீர் வழங்க வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்துக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ஆகையால் உளுந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தெற்கு ஓடையை மண்ணை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். கடம்பாகுளம் 10-வது மடை சீரமைக்க வேண்டும். குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் மேலக்காலில் தென்கரைக்குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் பாதிமட்டும் சீரமைப்பு பணி நடக்கிறது. ஆகையால் முழுமையாக குளத்தை சீரமைக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்கரை குளத்துக்கு தனிக்கால்வாய் அமைக்க வேண்டும். வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தனியார் காற்றாலை பணியை உடனடியாக நிறுத்தி பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவும், போலீசாரின் அச்சுறுத்தலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொத்தமல்லிக்கு பயிர் காப்பீடு

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 18 பேர் பெயரில் மோசடியாக இன்சூரன்சு போடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தமல்லியை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கருப்பூர் கண்மாய் மணல் மேடாக மாறி உள்ளது. இதனால் பாசனம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. அந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 பயிர்களுக்கு காப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் குளத்தில் நபார்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ரூ.3 கோடியே 76 லட்சம் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிதியை கொண்டு குளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வட்டார அளவில் விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும். தென்னம்பட்டியில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 45 நாட்களுக்கு பிறகு சீரமைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கலெக்டர் சந்தீப் நந்தூரி

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

வாழைப்பயிர்களை பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தண்ணீர் திறக்கப்பட்டு 1500 கனஅடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய கால்வாய்களில் பிரித்து அனுப்பும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பயிர் காப்பீடு திட்டத்தை பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.273 கோடி காப்பீடு தொகை வந்து உள்ளது. இதில் ரூ.272 கோடி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட சில பயிர்களுக்கு காப்பீடு தொகை வரவேண்டி உள்ளது. அந்த தொகை இந்த மாதத்துக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிமராமத்து திட்டம் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதன்படி தாமிரபரணி வடிநில கோட்டத்தில் 7 குளங்களும், வைப்பாறு கோட்டத்தில் 6 குளங்களும், கோரம்பள்ளம் கோட்டத்தில் 9 குளங்களும் ஆக மொத்தம் 22 குளங்கள் ரூ.9 கோடியே 54 லட்சம் செலவில் மராமத்து செய்யப்படுகிறது. தற்போது 11 குளங்களில் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. நீர்வள நிலவளத்திட்டத்தில் கல்லாற்றில் 2 வட்டங்களிலும், கீழ்தாமிரபரணியில் 4 வட்டங்களிலும் உள்ள 60 குளங்கள் பராமரிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் குளங்கள் பராமரிப்பு மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பங்கள், எந்திரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்கரை குளத்துக்கு தனிக்கால்வாய் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

மேலும் செய்திகள்