கம்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கம்பத்தில் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
கம்பம்,
கம்பம் நகராட்சியில் புதன்கிழமைதோறும் ஆக்கிரமிப்பு அகற்றும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வாரந்தோறும் புதன்கிழமையன்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றிவருகின்றனர்.
இந்தவாரம் புதன்கிழமையன்று வீட்டுமனை அங்கீகாரத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதால் அன்று நடைபெற இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேதி மாற்றம் செய்யப்பட்டு நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காந்திசிலை மேல்புறம் உள்ள தியாகி வெங்கடாசலம் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டிடங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது நகராட்சி கமிஷனர் சங்கரன், கட்டிட ஆய்வாளர் வீரணன், சர்வேயர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.