93 பவுன் நகைகள் கொள்ளைபோனதாக நாடகம்: விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்

காரைக்குடியில் 93 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகம் ஆடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-20 22:30 GMT

காரைக்குடி,

காரைக்குடி அய்யனார் கோவில் அருகே வசிப்பவர் சரவணன் (வயது 36). இவர் அம்மன் சன்னதியில் நகை பட்டறை வைத்துள்ளார். மேலும் காரைக்குடியில் உள்ள பிரபல நகைக் கடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுத்து வருகிறார்.

இவர் கழுத்தில் காயத்துடன் திடீரென காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். தகவல் அறிந்த தெற்கு போலீசார் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன், நான் 93 பவுன் நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அய்யனார்கோவில் அருகே 4 பேர் கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் வந்து என்னை வழிமறித்து பீர் பாட்டிலால் கழுத்தில் கீறி என்னிடம் இருந்த 93 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கா£த்திகேயன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ஏட்டுகள் கண்ணதாசன், சாமிநாதன், முத்தரசன், ராஜா ஆகியோர் கொண்ட கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சரவணை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பவம் நடந்த அந்த குறிப்பிட்ட நேரத்தில் சரவணனுக்கு வந்த செல்போன் எண் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த சரவணனின் நெருங்கிய நண்பரான பேச்சிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன் தனக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியை சமாளிப்பதற்காக தனது நண்பர்களின் உதவியுடன் கொள்ளை சம்பவம் நடந்ததாக நாடகத்தை நிறைவேற்றி உள்ளது தெரியவந்தது. சரவணனின் திட்டப்படி பேச்சிமுத்து மதுரைக்கு சென்று 93 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஒரு காரில் காரைக்குடிக்கு வந்து தனது தந்தையிடம் அந்த நகைகளை ஒப்படைத்துள்ளார். இதற்கு விக்ரம்சிங் என்பவர் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதையடுத்து சரவணன் மற்றும் பேச்சிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் இந்த கூட்டுச் சதியில் முருகன்(வயது39) என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த நகைகளை கைப்பற்றுவதற்காக பேச்சிமுத்துவின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு 43 பவுன் நகைகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள 50 பவுன் நகைகளை காணவில்லை. இதையடுத்து பேச்சிமுத்துவின் தந்தை சுப்பிரமணியன் அந்த மீதமுள்ள நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து சுப்பிரமணியனின் இருப்பிடத்தை செல்போன் மூலம் கண்டுபிடித்த போலீசார் அவர் மதுரை எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் இருந்தபோது அவரை கைது செய்து அவரிடம் இருந்த மீதமுள்ள 50 பவுன் நகைகளையும் மீட்டனர்.

காரைக்குடியில் நூதன முறையில் நாடகம் நடத்தி 93 பவுன் தங்க நகைகளை அபகரிக்க முயன்ற சரவணன், காரைக்குடி மார்க்கண்டேயன் கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து(38), அவரது தந்தை சுப்பிரமணி(60), இடையர்தெருவைச் சேர்ந்த முருகன்(39), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம்சிங் (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 28 மணி நேரத்திற்குள் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கா£த்திகேயன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்