சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

Update: 2018-07-20 22:30 GMT
சேலம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினால் காவல்துறை மூலம் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விவசாயத்தை அழித்து செயல்படுத்தப்படும் பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, முதன்மை செயலாளர் பாவரசு, மாவட்ட செயலாளர்கள் வசந்த், ஜெயச்சந்திரன், ஓமலூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாதையன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்டம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது ஆகும். இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போது சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். சுமார் ஆயிரம் ஏக்கரில் காடுகள் அழிக்கப்படுகிறது.

சேலம் கஞ்சமலை உள்பட 8 மலை குன்றுகள் தகர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை அழித்துவிட்டு பசுமை சாலை தேவையா? இது சாமானிய மக்களுக்காக போடப்படும் சாலை அல்ல. கார்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே பயன்படும் திட்டம்.

பொதுவாக ஒரு திட்டத்தை நிறைவேற்ற 60 சதவீதம் மக்கள் ஆதரவு இருக்க வேண்டும். அப்போது தான் அதை நிறைவேற்ற முடியும். ஆனால் பசுமை சாலைக்கு 80 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் கட்டாயப்படுத்தி நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தி வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரமாக ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியவில்லை. அவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

பசுமை சாலையால் பாதிக்கப்படும் மக்களை சந்தித்து பேசினால் போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதுபோன்ற அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். எனவே, விவசாயிகளை பாதிக்கக்கூடிய பசுமை சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக தி.மு.க.உள்ளிட்ட தோழமை கட்சிகளோடு இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தொல்.திருமாவளவன் நேற்று காலையில் சேலம் வந்தார். பின்னர், அவர் சேலம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும்போது, வருமான வரி சோதனை மூலம் மத்திய அரசு தங்களை எதிர்க்கும் கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது. திடீரென முதல்-அமைச்சரின் நெருக்கமானவர்களின் இல்லம், அலுவலகங்களில் சோதனை நடத்தியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. அது முதல்-அமைச்சரை மாற்றும் செயலா? அல்லது அ.தி.மு.க.அரசை கலைக்கும் முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜனதா தமிழகத்தில் குழப்பம் செய்து அரசியல் ஆதாயம் தேடுகிறதோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.

மேலும் செய்திகள்