பணியின்போது அலுவலகத்தில் இல்லாததால் தொழிலாளர் நல அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் மந்திரி வெங்கடரமணப்பா பேட்டி

பணியின்போது அலுவலகத்தில் இல்லாததால் தொழிலாளர் நல அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மந்திரி வெங்கடரமணப்பா கூறினார்.

Update: 2018-07-20 22:30 GMT

பெங்களூரு, 

பணியின்போது அலுவலகத்தில் இல்லாததால் தொழிலாளர் நல அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மந்திரி வெங்கடரமணப்பா கூறினார்.

தொழிலாளர் நலத்துறை மந்திரி வெங்கடரமணப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

விரைவில் அனுமதி கிடைக்கும்

கர்நாடக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கும் 112 ஈட்டுறுதி மருத்துவ சிகிச்சை மையங்கள், 7 ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க நிதி உதவி வழங்க கோரி மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.

இந்த தொழிலாளர் நல மருத்துவமனைகளில் நான் திடீரென ஆய்வு நடத்தினேன். அப்போது டாக்டர்கள் மீது நோயாளிகள் புகார் தெரிவித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் சரியான பணியாற்ற ஊழியர்கள் 37 பேரை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அனைவருக்கும் வீடு

ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க திட்டமிட்டுள்ளோம். வீடு கட்டுவதற்காக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு இல்லாத ஏழை தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

தொழிலாளர் நல கமி‌ஷனர் அலுவலகத்தில் நான் திடீரென ஆய்வு நடத்தினேன். அப்போது 2 அதிகாரிகள் பணியின்போது அலுவலகத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அலுவலகத்தை விட்டு வெளியே சென்றதற்கு அவர்கள் உரிய காரணத்தையும் சொல்லவில்லை. இதையடுத்து அந்த 2 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதிகாரிகள் பணியில் அலட்சியம் காட்டினால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சலுகைகள் கிடைக்கும்

கட்டிட தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எளிதாக கிடைக்கும். தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்ன என்பது எங்களுக்கு தெரியும். தொழிலாளர் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு வெங்கடரமணப்பா கூறினார்.

மேலும் செய்திகள்