திருச்சி கல்லுக்குழியில் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம்

திருச்சி கல்லுக்குழியில் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா திறந்து வைத்தார்.

Update: 2018-07-20 22:15 GMT
திருச்சி,

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா சென்னையில் இருந்து நேற்று காலை ரெயில் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து சமயபுரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரெயில்வே கோட்ட அலுவலகம் வந்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் திருச்சி கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி மற்றும் ரெயில்வேயில் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, “ரெயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும். இதேபோல் பணியின்போது எந்தவித தவறுகள் நடைபெறாமலும் பார்த்து கொள்ள வேண்டும். ரெயில் நிலையங்களை தொடர்ந்து தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதனை தொடர்ந்து அவர் ஜங்ஷன் ரெயில் நிலைய முதல் பிளாட்பாரம் அருகே என்ஜின் டிரைவர்களுக்காக கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து வைத்தார். அதன்பிறகு அங்கிருந்து கல்லுக்குழி ரெயில்வே மைதானத்துக்கு சென்று, அங்கு கட்டப்பட்டு இருந்த இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் ரெயில்வே பொதுமேலாளரும், கோட்ட மேலாளரும் இறகுபந்து விளையாடினர். இதையடுத்து அவர் ரெயில்வே மைதானத்தில் முடிக்கப்பட்ட நடைபயிற்சி பாதையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரெயில்வேயில் உள்ள வணிகம், பாதுகாப்பு, மெக்கானிக்கல், என்ஜினீயரிங் உள்பட பல்வேறு துறைகளுக்கு இடையே நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த ரெயில்வே பாதுகாப்புபடை அணிக்கும், 2-ம் இடம் பிடித்த வணிகப்பிரிவு அணிக்கும் சுழற்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

அதன்பிறகு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரெயில்வே பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கு பெண் ஊழியர்களுக்காக கட்டப்பட்ட விடுதியையும் அவர் திறந்து வைத்தார். இதேபோல் பொன்மலை ரெயில்வே பணிமனை அருகே உணவகமும், பொன்மலை பகுதியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடமும் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு ரெயில் மூலம் பொதுமேலாளர் திருச்சியில் இருந்து காரைக்கால் புறப்பட்டு சென்றார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.

மேலும் செய்திகள்