புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும்

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன் அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2018-07-19 22:24 GMT
புதுடெல்லி,

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். இந்தநிலையில் புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

இதற்கான உத்தரவு புதுவை அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி வந்தது. அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பெடி மறுநாளே பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

மத்திய அரசின் இந்த நியமனத்துக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள் சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நியமன எம்.எல்.ஏ.க்களை கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.

இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் தனலட்சுமி என்பவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசின் இந்த நியமனம் செல்லும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் உத்தரவுடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள நியமன எம்.எல். ஏ.க்கள் வந்தனர். ஆனால் சபாநாயகர் அவர்களை சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுத்தார்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தனலட்சுமி ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடைவிதிக்காத நிலையில் அந்த உத்தரவுடன் நியமன எம்.எல்.ஏ.க்கள் கடந்த 16-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தனர். அப்போதும் அவர்கள் சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மேல் முறையீடு செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் லட்சுமிநாராயணன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு எப்படி எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும்?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுவது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது.

சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், மாநில அரசின் ஆலோசனை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனம் வகுத்த நடைமுறைக்கு எதிரானது. 2001-ம் ஆண்டு முதல் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி இது போன்ற நியமனங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த முறை மட்டும் மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை.

எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள 3 பேரில் 2 பேர் மீது வழக்குகள் உள்ளன. ஒருவர் தேர்தலில் தோல்வி அடைந்தவர். எனவே இந்த மனு மிகவும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தன்னுடைய வாதத்தில், யூனியன் பிரதேச நிர்வாகத்தின் மீது மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, மத்திய அரசு ஆலோசனை எதுவும் நடத்த தேவையில்லை என்று தெரிவித்தார். நியமன எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தில், எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும் சபாநாயகர் இந்த எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதி வழங்க மறுக்கிறார். இது அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல் என்றார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே, நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரி தலைமை செயலாளர் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.    

மேலும் செய்திகள்