நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தற்போது கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்றும் காணப்படுகிறது. இந்த கழிவுநீரை அகற்றவேண்டும் என்று பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கடந்த 15-ந் தேதி மணிமுக்தாற்றங்கரையில் உள்ள ஆற்றங்கரை விநாயகரிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுப்பணித்துறையினர் ஆற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆற்றில் இருந்த கழிவுநீர் முறையாக அகற்றப்படவில்லை.
இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆடி முதல் வெள்ளி என்பதால், அம்மன் கோவில்களின் கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்காகவும், காப்பு கட்டுவதற்காகவும் தீர்த்தம் கொண்டு செல்வதற்காக பக்தர்கள் மணிமுக்தாற்றுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் வழிபடுவதற்கு இடமே இல்லாத நிலையில் ஆற்றில் கழிவுநீராக இருக்கிறது.
பக்தர்களின் நலன் கருதி ஆற்றில் உள்ள கழிவுநீரை அகற்றித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று காலை தீர்த்தமண்டபத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் கவுன்சிலர்கள் சிங்காரவேல், ரவிச்சந்திரன், கர்ணன் மற்றும் மருதையன், துரைவாசுதேவன், பாண்டியன், செல்வம் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் நகராட்சி ஆணையாளர் பாலுவை சந்தித்து மனு கொடுத்தனர். உடனே அவர் துப்புரவு அலுவலர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது மனுகொடுத்த மக்களுக்கும், துப்புரவு அலுவலர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நகராட்சி ஊழியர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் தலையில் தாக்கி அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பெண்ணிடம் அந்த ஊழியர் மன்னிப்பு கேட்க வேண்டும். நகராட்சி ஆணையாளர் மணிமுக்தாற்றிற்கு வந்து உடனே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் நகராட்சி ஆணையர் பாலு முன்னிலையில் தாக்கப்பட்ட பெண்ணிடம் அந்த ஊழியர் மன்னிப்புக்கேட்டார்.
இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் அதிகாரிகள் மணிமுக்தாற்றிற்கு சென்று, கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.