தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டியது: ஹாரங்கி அணையில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை

தொடர் கனமழை காரணமாக ஹாரங்கி அணை தனது முழுகொள்ளளவை எட்டியது. இதன்காரணமாக நேற்று ஹாரங்கி அணையில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை செய்தார்.

Update: 2018-07-19 23:30 GMT
குடகு, 

தொடர் கனமழை காரணமாக ஹாரங்கி அணை தனது முழுகொள்ளளவை எட்டியது. இதன்காரணமாக நேற்று ஹாரங்கி அணையில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை செய்தார்.

ஹாரங்கி அணை

கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஹாரங்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரம் கொண்ட ஹாரங்கி அணையில் தற்போது 2,857.71 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14,465 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஹாரங்கி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்தது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி 19-ந்தேதி (அதாவது நேற்று) அணையில் சிறப்பு பூஜை செய்வதால், ஹாரங்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

குமாரசாமி சிறப்பு பூஜை

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை குசால்நகர் பகுதியில் உள்ள ஹாரங்கி அணை பகுதிக்கு வந்தார். அங்கு அவர் அணைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் குமாரசாமி நவதானியங்கள் அடங்கிய முறத்தை ஹாரங்கி அணையில் போட்டு சிறப்பு பூஜை செய்தார்.

இந்த பூஜையில் அவருடைய மனைவி அனிதா குமாரசாமி, மந்திரிகள் டி.கே.சிவக்குமார், எச்.டி.ரேவண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

இதையடுத்து நேற்று மாலை மடிகேரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குமாரசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குடகு மாவட்டத்தில் அனைத்து மழை சேதங்களை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று இரவு குமாரசாமி மடிகேரியிலேயே தங்கினார்.

அவர் இன்று (வெள்ளிக் கிழமை) காலை காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி பகுதியில் சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.

அதைத்தொடர்ந்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கும் இன்று அவர் சிறப்பு பூஜை செய்கிறார்.

மேலும் செய்திகள்