கத்தியை காட்டி மிரட்டி டிபன் கடைக்காரரிடம் பணம் பறித்த 4 பேர் கைது

டிபன் கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-19 22:00 GMT
திரு.வி.க.நகர், 

சென்னை ஓட்டேரி மங்களபுரத்தை சேர்ந்தவர் கிரிராஜன்(வயது 53). இவர், சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் சந்திரா யோகி சமாதி சந்திப்பில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அவரிடம் 4 பேர் கொண்ட கும்பல் டிபன் வாங்க வந்தனர்.

அவர்கள் திடீரென்று கிரிராஜனிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 ரூபாயை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிராஜன் கூச்சலிட்டார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர் மற்றும் போலீசார், தப்பி ஓட முயன்ற 4 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், ஓட்டேரியை சேர்ந்த தினகரன்(20), சுகுமார்(21), சிவசங்கர்(20) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த சேகர் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கிரிராஜனிடம் பறித்த ரூ.200 மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்