நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை

நிதி ஒதுக்க மசோதா தாக்கல் செய்ய கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் புதுவை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2018-07-19 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் ஆரம்பம் முதல் சிக்கலாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் கவர்னர் கிரண்பெடி தலைமையில் மாநில திட்டக்குழு கூடி மாநிலத்தின் பட்ஜெட் ரூ.7ஆயிரத்து 530 கோடி என்று இறுதி செய்தது. இதற்கு அனுமதி பெற வேண்டி பட்ஜெட் தொடர்பான கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இதில் பல்வேறு சந்தேகங்களை மத்திய அரசு எழுப்பியது. அதற்கு புதுவை அரசு தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த (ஜூன்) மாதம் 4, 5-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மட்டுமே நடந்தது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டசபை கூட்டத்தொடர் அப்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசி பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற்று வந்தார்.

தொடர்ந்து சட்டசபை கூட்டத்தை கூட்டி இம்மாதம் (ஜூலை) 2-ந்தேதி பட்ஜெட்டை முதல் அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதன்பின் தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்தது. இந்த கூட்டத்தொடரை வருகிற 27-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி, அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திக்க புதுவை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லி செல்வது என சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்றுடன் சட்டசபை நிகழ்வுகள் முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட், மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. ஆனால் நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் பட்ஜெட் தொகையை துறைகளுக்கு சட்டப்படி பிரித்து கொடுத்து அவற்றை செலவிட முடியும்.

இந்த நிதி ஒதுக்க மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆனால் நேற்று வரை கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தநிலையில் சட்டசபையை காலவரையின்றி சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதுதொடர்பாக சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க மசோதா தாக்கல் செய்ய கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கான கோப்பினை நிதித்துறை அனுப்பியிருக்கும். அதற்கு ஒப்புதல் வரவிலை. மற்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்றினால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். எனவே நிதி ஒதுக்க மசோதாவை நிறைவேற்ற மறுபடியும் சட்டசபையை கூட்ட வேண்டும். இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதுவை அரசின் 4 மாத (ஏப்ரல், மே, ஜூன், ஜூலை) செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி இந்த மாதம் (ஜூலை) வரை அரசின் அனைத்து திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியம், இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அடுத்த (ஆகஸ்டு) மாதம் செயல்படுத்தப்பட இந்த நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

அதேபோல் அரசு ஊழியர்களுக்கு 4 மாத சம்பளத்துக்கும் மார்ச் மாத இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாத சம்பளமும் அந்த மாதத்தின் இறுதி நாளில் புதுவை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.

ஆனால் மார்ச் மாதத்துக்கான சம்பளம் மட்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதிதான் வழங்கப்படும். அந்த சம்பளம் அடுத்து வரும் நிதியாண்டில்தான் சேர்க்கப்படும். அதன்படி மார்ச் மாதத்துக்கான சம்பளத்தை ஏப்ரல் மாதம் முதல் தேதியிலும், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை அந்தந்த மாதங்களின் இறுதியில் அரசு ஊழியர்கள் பெற்று வந்தனர்.

இந்த 4 மாதத்துக்கு பெறப்பட்ட ஒப்புதலின்படி 4 மாத சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெற்றுவிட்டனர். ஜூலை மாதத்துக்கான சம்பளத்தை இம்மாத இறுதியில் பெறவேண்டும். இதற்கு நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட்டதால்தான் சம்பளம் வழங்க முடியும்.

தற்போது நிதி ஒதுக்க மசோதா தாக்கல் செய்ய கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்காததால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்துக்கான சம்பளம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்