சட்டப்பேரவைக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும் தான் அதிகாரம் என்று புதுவை சட்டசபையில் அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

Update: 2018-07-19 21:45 GMT
புதுச்சேரி,

அதன் விவரம் வருமாறு:- சுப்ரீம் கோட்டில் டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்ந்த வழக்கில் கடந்த 4.7.2018 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் அமைச்சரவைக்கே மக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு உள்ளது. அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுக்கும் அதிகாரங்கள் உள்ளது, இதை கவர்னர் மீறினால் அது மக்கள் மக்கள் ஆட்சிக்கு எதிராக அமைந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பில் கூறியுள்ளவாறு மாநிலத்திற்கான அதிகாரங்களை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அமைச்சரவை செயல்படுத்த முடியும் என்றும், இந்திய அரசியலமைப்பு பிரிவு 239, 239(ஏ) மற்றும் 240-ன் படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டசபை நடைமுறையில் இருக்கும் நிலையில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களும் புதுச்சேரி சட்டசபை மற்றும் அமைச்சரவைக்கும் மட்டுமே உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் தெளிவாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு ஆணையின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:- முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைப்படியே கவர்னர் செயல்பட வேண்டும். அரசின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு என்று தனிப்பட்ட எந்த அதிகாரமும் கிடையாது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கவர்னர் ஒத்துழைக்க வேண்டும்.

சிறுசிறு அற்ப காரணங்களை காட்டி கோப்புகளை, கருத்துருக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பக் கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லாத நிலையில் அரசின் பிரதிநிதியாகவே உள்ள கவர்னர், புதுச்சேரி அமைச்சரவை மற்றும் சட்டப்பேரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர் என்றும் அமைச்சரவையின் முடிவுகளின் படி கவர்னர் செயல்பட வேண்டும் என்றும் இந்த சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

அன்பழகன் (அ.தி.மு.க.):- புதுவை மாநிலத்தில் கடந்த 2 ஆண்டாக அரசின் நிர்வாகம் முதல்-அமைச்சர் எண்ணப்படி இல்லை. அமைச்சர்கள், சட்டமன்றத்தின் அறிவிப்பை செயல்படுத்த முடியவில்லை. புதுவையில் இரட்டை ஆட்சி நடக்கிறது. ஆட்சியாளர்கள் குழப்பமான சூழ்நிலையில் உள்ளனர். இது புதுவையில் மட்டுமல்ல பா.ஜ.க. இல்லாமல் மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இதேபோல் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. அதிகாரம் தொடர்பாக டெல்லி அரசு சுப்ரீம் கோட்டிற்கு வழக்கு தொடுத்த போது நாமும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்