விவசாயிகள் பெயரில் ரூ.5,400 கோடி கடன் வாங்கி மோசடி? தொழில் அதிபர் மீது புகார்

விவசாயிகள் பெயரில் ரூ.5,400 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது புகார் எழுந்துள்ளது.

Update: 2018-07-18 23:40 GMT
மும்பை, 

விவசாயிகள் பெயரில் ரூ.5,400 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது புகார் எழுந்துள்ளது.

ரூ.5,400 கோடி கடன் வாங்கி மோசடி

பர்பானியை சேர்ந்த தொழில் அதிபர் ரத்னாகர் குட்டே. இவர் அங்குள்ள காங்கேட் பகுதியில் சர்க்கரை மற்றும் எரிசக்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சர்க்கரை ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் கரும்பு வினியோகம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ரத்னாகர் குட்டேயின் நிறுவனத்திற்கு கரும்பு வினியோகம் செய்யும் விவசாயிகள் பலருக்கும் வங்கிகளில் இருந்து நோட்டீஸ் வந்தது.

அதில் விவசாய கடனாக பல லட்சம் ரூபாயை விவசாயிகள் பெற்றதாகவும், அந்த தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொழில் அதிபர் ரத்னாகர் குட்டே விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.5,400 கோடி அளவுக்கு வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வங்கி கடன் மோசடி விவகாரம் மராட்டிய மேல்-சபை கூட்டத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சி தலைவரான தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்), இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தொழில் அதிபர் ரத்னாகர் குட்டே மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கி கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி விட்ட நிலையில் மற்றொரு தொழில் அதிபர் மீது வங்கி கடன் மோசடி புகார் எழுந்து இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்