சாங்கிலியில் பயங்கரம் போக்குவரத்து போலீஸ்காரர் குத்திக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு

சாங்கிலியில் போக்குவரத்து போலீஸ்காரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-07-18 23:30 GMT
புனே, 

சாங்கிலியில் போக்குவரத்து போலீஸ்காரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

போக்குவரத்து போலீஸ்காரர்

சாங்கிலி அருகே மீரஜ் சிட்டி போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்து வந்தவர் சமாதால் மாண்டே(வயது30). இவர் நேற்று முன்தினம் இரவு சாங்கிலியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது, ஓட்டலுக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூராக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்ட அவர் காரை தள்ளி நிறுத்தும்படி காரில் இருந்த 2 பேரிடம் கூறினார்.

அப்போது காரில் இருந்த 2 பேரும் காரை அப்புறப்படுத்த மறுத்து போலீஸ்காரர் சமாதால் மாண்டேவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சண்டையை கண்ட ஓட்டல் உரிமையாளர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.

சரமாரி கத்திக்குத்து

அப்போது, காரில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர் சமாதால் மாண்டேவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த சாங்கிலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போலீஸ்காரர் சமாதால் மாண்டேவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே பலியானது தெரியவந்தது.

பரபரப்பு

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை குத்திக்கொலை செய்த வாலிபரை பிடிக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் சமாதால் மாண்டே விஸ்ராம்பாக் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் கைக்குழந்தை உள்ளது.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்