3-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தீவிரம் மும்பைக்கு ரெயில் மூலம் கொண்டு வந்து பால் வினியோகம் புனேயில் சப்ளை முடங்கியது
மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. மும்பைக்கு ரெயில் மூலம் டேங்கர்களில் பால் கொண்டு வந்து வினியோகிக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. மும்பைக்கு ரெயில் மூலம் டேங்கர்களில் பால் கொண்டு வந்து வினியோகிக்கப்பட்டது. புனேயில் பால் வினியோகம் முடங்கி உள்ளது.
பால் கொள்முதல் விலை
மராட்டியத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக பால் உற்பத்தி தான் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு மும்பை, புனே ஆகிய பெருநகரங்களுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்க வேண்டும், மேலும் ரூ.5 மானியமாக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி சுவாபிமானி கட்சியை சேர்ந்த ராஜூ ஷெட்டி எம்.பி. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
போராட்டம் தீவிரம்
அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால் மும்பை, புனே ஆகிய நகரங்களுக்கு பால் வினியோகத்தை அடியோடு முடக்குவோம் என அவர் எச்சரித்து இருந்தார். அதன்படி கடந்த 16-ந் தேதி முதல் சுவாபிமானி கட்சியின் விவசாய அமைப்பான சுவாபிமானி சேத்காரி சங்கட்னா உள்ளிட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மும்பை, புனே நகரங்களுக்கு பாலை கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
டேங்கர்களில் கொண்டு வரப்பட்ட பாலை சாலைகளில் கொட்டியும், பாலில் குளித்தும், மாடுகளை பாலில் குளிக்க வைத்தும் மாநில அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பால் லாரிக்கு தீ வைத்தும், அடித்து நொறுக்கியும் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
சாங்கிலி, கோலாப்பூர், புனே, உஸ்மனாபாத், அகமதுநகர், நாசிக், சோலாப்பூர், அவுரங்காபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த போராட்டம் தீவிரமானது.
குஜராத்தில் இருந்து வந்த பால்
இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அதே நேரத்தில், விவசாயிகளின் இந்த போராட்டம் மும்பையில் பால் வினியோகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பால் லாரிகள் மும்பைக்கு கொண்டு வரப்பட்டன. பால் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக மாநில அரசு அண்டை மாநிலமான குஜராத்தில் இருந்து பாலை கொண்டு வர ஏற்பாடு செய்தது.
இதையடுத்து குஜராத் பால் பொருட்கள் மேம்பாட்டு கழகம் மேற்கு ரெயில்வே உதவியுடன் பால் டேங்கர்களை மும்பைக்கு அனுப்பி வைத்தது.
இதன்படி மும்பைக்கு குஜராத்தில் இருந்து பால் டேங்கர்கள் ரெயிலில் இணைத்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு நேற்று முன்தினம் 3 டேங்கர்களில் குஜராத்தில் இருந்து மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தை பால் வந்தடைந்தது.
அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டது.
ரெயிலை மறிக்க திரண்டனர்
இதற்கிடையே, குஜராத்தில் இருந்து ரெயில் மூலம் பால் மும்பைக்கு கொண்டு வரப்படுவதை தடுத்து, மும்பையிலும் பால் வினியோகத்தை முடக்க ராஜூ ஷெட்டி எம்.பி. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள தகானு ரெயில் நிலையத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் திரண்டார்.
இதையடுத்து, தகானு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு கருதி போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. பால் டேங்கர்களுடன் ரெயில் ஏதும் வருகிறதா? என அவர்கள் பிளாட்பாரத்தில் முகாமிட்டு பார்த்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, குஜராத்தில் இருந்து மும்பைக்கு பால் டேங்கரை கொண்டு வரும் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைத்தனர்.
இன்று சாலை மறியல்
இதுபற்றி ராஜூ ஷெட்டி எம்.பி. கூறுகையில், ‘மராட்டிய அரசு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது போல் தெரியவில்லை. எனவே நாளை (இன்று) மாநிலத்தின் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது, சாலைகளை மறித்து கால்நடைகளை நிற்க விடுவோம்.
இந்த வழியாக குஜராத்தில் இருந்து மும்பைக்கு பால் டேங்கர்கள் ரெயில் மூலம் கொண்டு வருவதை பார்த்தால் நாங்கள் அந்த ரெயிலை நிறுத்துவோம்’ என்றார்.
புனேயில் பால் சப்ளை முடங்கியது
இதற்கிடையே தினசரி 13 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படும் புனே நகரத்தில் பால் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தனியார் மற்றும் கூட்டுறவு பண்ணைகள் பால் கொள்முதல் செய்வதை நிறுத்தி இருப்பதால் பால் வினியோகம் முடங்கி உள்ளது.
பால் தட்டுப்பாடு ஏற்பட்டு புனே மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.