கர்நாடக எம்.பி.க்களுக்கு செல்போன் வழங்கியது எனக்கு தெரியாது துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேட்டி

கர்நாடக எம்.பி.க்களுக்கு செல்போன் வழங்கியது எனக்கு தெரியாது என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2018-07-18 22:30 GMT

பெங்களூரு, 

கர்நாடக எம்.பி.க்களுக்கு செல்போன் வழங்கியது எனக்கு தெரியாது என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எந்த தொடர்பும் இல்லை

கர்நாடக எம்.பி.க்களுக்கு செல்போன் பரிசாக வழங்கப்பட்டது எனக்கு தெரியாது. அந்த செல்போனை மாநில அரசு வழங்கியதா? அல்லது மந்திரி டி.கே.சிவக்குமார் வழங்கினாரா? என்பது எனக்கு தெரியாது. விவாதிக்கும் அளவுக்கு அது பெரிய வி‌ஷயம் அல்ல. காவிரி பிரச்சினை போன்ற தீவிரமான பிரச்சினைகள் உள்ளன.

பா.ஜனதாவினர் அதுபற்றி விவாதிக்க வேண்டும். அதனால் நமது மாநிலத்திற்கும் நல்லது நடக்கும். ரவுடி சைக்கிள் ரவிக்கும், முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீலுக்கும் தொடர்பு இருப்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடைபெறும்போது அதுபற்றி நான் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால் எம்.பி.பட்டீலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே கூறி இருக்கிறார்கள்.

அறிக்கை கேட்டு இருக்கிறதா?

மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. இதுபற்றி அறிக்கை வழங்குமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது. இது கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு சம்பந்தப்பட்ட வி‌ஷயம். கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவிடம் அறிக்கை கேட்டு இருக்கலாம். எனது சகோதரர் உடல்நிலை மோசமாக உள்ளது. அதன் காரணமாக நான் முதல்–மந்திரியுடன் டெல்லிக்கு செல்லவில்லை.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்