விக்கிரவாண்டி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் திருட்டு

விக்கிரவாண்டி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-17 22:11 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே வி.எஸ். அடைக்கலாபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக நாகப்பன் என்பவர் உள்ளார். மேலும் விற்பனையாளராக ஜெயபிரகாசும், செந்தில்முருகன் ஆகியோர் இருந்தனர். நேற்று முன்தினம், வியாபாரம் முடிந்த பின்னர் இரவு வழக்கம் போல் இவர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர்.

நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம் போல் கடையை திறக்க ஜெயபிரகாஷ், செந்தில்முருகன் ஆகியோர் வந்தனர். அப்போது, கடையின் பின்பக்க சுவர் உடைக்கப்பட்ட நிலையில், ஒருவர் வந்து செல்லும் அளவுக்கு பெரிய அளவில் துளை போடப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்த மதுபாட்டில்களை அவர்கள் பார்வையிட்ட போது, ஏராளமான மதுபாட்டில்கள் மாயமாகி இருந்தன. இதன் மூலம் மர்ம மனிதர்கள் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்து மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி, அவர்கள் உடனடியாக விக்கிரவாண்டி போலீசார் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதையடுத்து மேற்பார்வையாளர் நாகப்பன், கடையில் உள்ள இருப்பு இருந்த மதுபாட்டில்கள் விவரத்தை சரிபார்த்தார். பல்வேறு வகையான மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 33 ஆயிரத்து 670 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடையில் வைத்து இருந்த ரூ.ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்