கடலூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகைகள் கொள்ளை

கடலூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-07-17 21:46 GMT
கடலூர்,

கடலூர் கூத்தப்பாக்கம் பங்காருராஜாநகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 42). இவர் கடலூர் பஸ் நிலையம் எதிரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பவானி (37). நர்சான இவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாதனா (8) என்கிற மகளும், மனோரஞ்சன் (13) என்கிற மகனும் உள்ளனர்.

சாதனா கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பும், மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பவானி வேலைக்கு சென்று விட்டார். சாதனாவும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். இதையடுத்து காலை 11 மணி அளவில் செல்வக்குமார் வீட்டை பூட்டி விட்டு ஓட்டலுக்கு சென்று விட்டார். மாலையில் அவரது வீட்டில் வேலை பார்த்து வரும் அஞ்சலாட்சி என்பவர், வீட்டு வேலை செய்வதற்காக வந்தார். அப்போது செல்வக்குமாரின் வீட்டுக்கதவு திறந்து கிடந்தது.

இது பற்றி அவர் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் செல்வக்குமார் விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார் பீரோவில் தான் வைத்திருந்த 17 பவுன் நகைகளை பார்த்தார்.

ஆனால் அந்த நகைகளை காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 17 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

இது பற்றி செல்வக்குமார் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் முக்கிய தடயங்களையும் சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.3½ லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்