தனியார் பள்ளி வேன் மோதி பிளஸ்-1 மாணவர் பரிதாப சாவு டிரைவர் கைது

சேலத்தில் தனியார் பள்ளி வேன் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-17 22:15 GMT
சூரமங்கலம்,

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் தனுஷ் (வயது 16). இவர் சூரமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை தனுஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான பிரபாகரன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில், சூரமங்கலத்தில் செய்தித்தாள் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளை தனுஷ் ஓட்ட, பின்னால் பிரபாகரன் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தனுஷ், பிரபாகரன் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தனுசை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரபாகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தனுஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வேன் டிரைவரான பள்ளப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்