கல்லூரி மாணவி பரிதாப சாவு: போலி பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்தில் கைதான போலி பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போலியாக சான்றிதழ் தயாரித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-18 00:00 GMT
கோவை,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் விராலியூரில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து கீழே விரிக்கப்பட்டு இருந்த வலையில் குதிக்க தயங்கிய மாணவி லோகேஸ்வரியை (வயது 19), பயிற்சியாளர் ஆறுமுகம் (31) பிடித்து தள்ளினார்.

இதில் அவர் கீழே விழுந்தபோது முதலாவது மாடியில் உள்ள ஷன் சேடில் தலை மோதியதில் படுகாயம் அடைந்ததால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், ஆறுமுகம் மீது தெரிந்தே மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுகம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் போலி சான்றிதழ் பெற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியை நடத்தி வந்தது தெரியவந்தது.

அத்துடன் அவர் சென்னையில் அலுவலகம் நடத்தி கடந்த 6 ஆண்டுகளில் கோவை மாவட்டம் உள்பட பல இடங்களில் 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைதொடர்ந்து அவர் மீது கூடுதலாக மோசடி செய்தல் என்ற வழக்கும் சேர்க்கப்பட்டது.

ஆறுமுகத்துக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததில் சென்னையை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அதுபோன்று கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரும் ஆறுமுகத்தின் காதலியிடமும் விசாரணை நடத்தப் பட்டது.

அதில் அவருக்கும், போலி சான்றிதழ் தயாரித்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. எனவே போலீசார் போலி பயிற்சியாளரான ஆறுமுகத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது போலீசார் ஆறுமுகத்தை பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கண்ணன், ஆறுமுகத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்ததுடன் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து ஆலாந்துறை போலீசார் ஆறுமுகத்தை போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வைத்து போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, ‘ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை நாளை (இன்று) சென்னை அழைத்து செல்ல உள்ளோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்