தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியபோதிலும் வற்றிப்போன சிம்ஷா நதி; விவசாயிகள் கவலை

தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியபோதிலும் சிம்ஷா நதி வற்றிப்போய் இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்

Update: 2018-07-17 22:30 GMT

ஹலகூர், 

தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியபோதிலும் சிம்ஷா நதி வற்றிப்போய் இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வற்றிப்போன சிம்ஷா நதி

கர்நாடகத்தில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த மே மாதம் கடைசியில் தொடங்கிய பருவமழை மாநிலம் முழுவதும் தொடர்ந்து பரவலாக பெய்து வந்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி, கபிலா, ஹேமாவதி, துங்கா, பத்ரா என அனைத்து ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தின் மற்றொரு புறத்தில் இருந்து உதயமாகி காவிரியில் கலந்து தமிழ்நாட்டுக்கு பாய்ந்தோடும் சிம்ஷா நதி, தண்ணீர் இல்லாமல் கடுமையான வற்றி இருக்கிறது. சிம்ஷா நதி, கதம்பா நதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நதியின் நீர்பிடிப்பு பகுதிகளாக மண்டியா மாவட்டத்தின் மேல்புறமும், முத்தத்தி வனப்பகுதியும் விளங்குகின்றன.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தபோதிலும், முத்தத்தி வனப்பகுதி மற்றும் மண்டியா மாவட்டத்தில் மேல்புறத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறைவான மழையே பெய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிம்ஷா நதியை நம்பியுள்ள விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏனெனில் சிம்ஷா நதியில் தண்ணீர் மிகவும் வற்றிவிட்டதே அதற்கு காரணம் ஆகும்.

குறிப்பாக மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட ஹலகூர், தொரேகாடனஹள்ளி, முத்தத்தி உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், சிம்ஷா நதிக்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கவலை அடைந்து தவித்து வருகிறார்கள். தற்போது மழை குறைந்துவிட்ட நிலையில், அடுத்த மாதம்(ஆகஸ்டு) மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதாவது சிம்ஷா நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்